சென்னை: பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி சென்னை வருகிறார். காலை 7.50 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில் டெல்லியிலிருந்து கிளம்பும் மோடி காலை 10.35க்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 11மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடை அவர் சென்றடைகிறார்.
பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை நகருக்கு வருவதற்கும், திரும்பிச் செல்வதற்கும் ஹெலிகாப்டரையே பயன்படுத்துவதால் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று காலையிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பழைய விமான நிலையம் பகுதிகளில், விமான நிறுவன அலுவலகங்கள், ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களும் பலகட்ட சோதனைகளுக்குப் பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முறையான அனுமதி அட்டைகள் இல்லாதவர்கள், விமான நிலைய வளாகத்திற்குள்ளே வருவதற்கே அனுமதியில்லை.
சென்னை பழைய விமான நிலையம் பகுதி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைகளை நடத்துகின்றனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வரும் ஞாயிறு மாலைவரை தொடர்ந்து நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்பிற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் சிறப்பு பாதுகாப்புப் படை எஸ்பிஜி ஐஜி தலைமையில் நேற்று சென்னை வந்தடைந்த சுமார் 25 பேர் பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் இடம், பிரதமரின் ஹெலிகாப்டர் புறப்படும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் எஸ்பிஜி ஐஜி தலைமையில் நடந்தது.
அதில், டெல்லி சிறப்பு பாதுகாப்புப் படை உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல் உயர் அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, விவிஐபி பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி முதலில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தயாநிதி