சென்னை: கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு கிராம சபைக் கூட்ட செலவின வரம்பினை ரூ.1000-லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ’கிராம சபையினை நடத்த, கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 / செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியிருந்தது.
மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2022ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது. கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான செலவினங்களை ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் அதிகபட்சமாக ரூ.1000 / மட்டும் செலவினம் மேற்கொள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தத்தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதனை ரூ.5000ஆக உயர்த்தி கிராம சபை / சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சிப் பொது நிதியில் மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது.
அதன் அடிப்படையில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000/-லிருந்து ரூ.5000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கிராம சபை / சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சிப் பொது நிதியிலிருந்து மேலே ஒப்பளிக்கப்பட்ட இச்செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி வளாகத்தில் மாணவியின் உருவ பொம்மையை வைத்து சிபிசிஐடியினர் ஆய்வு!