சென்னை: சென்னையில் உள்ள சில மாவட்டங்களில் மின்சாரத்துறைக்கு பொருட்கள் சப்ளை செய்ததில் முகவர்கள், இடைத்தரகர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவர்களுக்கு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் இன்று (செப்.20) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியம் நிர்வகிக்கக்கூடிய அனல் மின் நிலையங்களில், நிலக்கரியை கையாளுவதற்கு தேவைப்படும் கன்வேயர் பெல்ட் கேபிள்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. இந்த கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்று ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்கின்ற நிறுவனம். இந்த நிறுவனம் பொன்னேரி அருகே செயல்பட்டு வருகிறது.
மேலும் இதன் கார்ப்பரேட் அலுவலகம் சென்னை ஜாபர்கான் பேட்டரியில், சந்தகிரி தெருவில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்த அலுவலகத்தின் மேல் தளத்தில் அதன் உரிமையாளர் வீடும் உள்ளதால், அங்கும் ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, அந்த பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், இந்த நிறுவனமானது வடசென்னையில் இயங்கக் கூடிய அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கையாளுவதற்கு கன்வேயர் பெல்ட் வழங்கக்கூடிய முகவராக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து டெண்டர்களை மின்வாரியத்தில் இருந்து எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது.
அதேபோல் அந்த அலுவலகத்தின் பக்கத்திலேயே மற்றொரு அலுவலகம் வந்து செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்திலும், ஐந்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி பகுதியில் இயங்கும் இன்டர் லேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கார்பெட் அலுவலகமும் இங்கு இயங்கி வருகின்றது. இந்த நிலையில், அங்கும் சோதனை மேற்கொள்ளப்படு வருகிறது.
இந்த அலுவலகத்தின் மூலம் இணைய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை செய்து தரக்கூடிய பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் அபி ஜெனிக்ஸ் பயோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும், பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் சென்னை தேனாம்பேட்டை வெங்கட்டம்மன் தெருவை சேர்ந்த காசி என்பவரது வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை தலைமைச் செயலாக காலனி, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட 10 பகுதிகளும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: IT Raid : தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கன்வயர் பெல்ட் போடுவதில் முறைகேடா?.. வருமான வரித்துறை விசாரணை!