சென்னை: தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை சப்ளை செய்யக்கூடிய, ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அதனுடைய கிளை நிறுவனங்களில், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை (செப்.20) முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்துள்ள தலைமைச் செயலக காலனி பகுதியில், ஒரே கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஜித்தேஷ் சிங், அபிஷேக் சிங் என்பவர்களுக்குச் சொந்தமான சப்ளையர் மெட்டல்ஸ் சொல்யூஷன் மற்றும் ஆம்ப்ஸ் & வோல்ட்ஸ் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இதில் ஜித்தேஷ் சிங் மற்றும் அபிஷேக் சிங் இருவரும் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் மின் கம்பிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்கம்பிகளை சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த இரண்டு பங்குதாரர்கள் பெயர்களில், மேலும் சில நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
இதையும் படிங்க: IT Raid : தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கன்வயர் பெல்ட் போடுவதில் முறைகேடா?.. வருமான வரித்துறை விசாரணை!
இந்த நிலையில் ஒரே கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டு கிளை நிறுவனங்களும் அந்த ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஒரே நிறுவனத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற வருவாயை வெவ்வேறு கிளை நிறுவனத்தில் இருந்து கிடைக்கப்பெற்றது போல் கணக்கு காட்டி முறைகேடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வருவாயை திசை திருப்பி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில், வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த ஒரே கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு நிறுவனத்திலும் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ராதா இன்ஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வரும் நிலையில், அது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கம்பிகளை உற்பத்தி செய்து தரக்கூடிய இரண்டு நிறுவனங்களில் தற்போது சோதனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!