சென்னை: சென்னை மாநகரத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனை முதல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து பார்ப்போம்.
சென்னையிலுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனை: சென்னையில் உள்ள புரவாங்கார பிராவிடன்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (அக்.4) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எம்ஆர்சிநகர் பீச் இரண்டாவது தெருவிலுள்ள புரவாங்கார பிராவிடன்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ளது. இந்நிறுவனமானது, இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகச் சென்னை, மும்பை, கர்நாடகா, புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகளைத் திறந்து அடுக்குமாடிக் குடியிருப்பு, நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டில், பல கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிந்த பின்னரே எவ்வளவு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கள்ளச் சாவியை பயன்படுத்தி தேவலாயத்தில் கொள்ளை: சென்னை கோட்டூர்புரம், சர்தார் பட்டேல் சாலை பகுதியில், ‘ஹவுஸ் ஆப் பிரேயர்’ என்ற பெயரில் ஜெப வீடு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெப வீட்டில் தொடர்ந்து, ஜெப கூட்டங்கள் நடைபெறும். ஆலயத்தின் நிர்வாகியாக பென்சன் ஜெயராஜ் (73) என்பவர் உள்ளார். இவர், கடந்த 1ஆம் தேதி இரவு ஜெப ஆராதனை முடிந்து காணிக்கை பணம் ரூ.10 லட்சத்தை அலுவலகத்திலுள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சென்று உள்ளார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரும் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று (அக்.3) காலை வழக்கம் போல் காலை 9 மணிக்கு ஆலயத்துக்கு வந்த நிர்வாகிகள் கதவை திறக்க முயன்ற போது கதவு ஏற்கெனவே திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் திறந்து இருந்ததுடன் அதில், வைத்திருந்த ரூ.10 லட்சம் காணிக்கை பணமும் திருடுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக, தேவாலய நிர்வாகி ஜெயராஜ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதன் மூலமும் விசாரணை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ ஜெபவீடு ஆலயத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த அஜிசுல்லா (25). ஆட்டோ ஓட்டி வருகிறார். மற்ற நேரங்களில் கஞ்சா விற்பது இவரது வழக்கம். ஓட்டேரிக்கு வந்து கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களை விற்று வந்துள்ளார். இவரிடம், ஓட்டேரி தாசமகான் தர்கா தெருவைச் சேர்ந்த அருண் (எ) அப்பு (35), கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்புவை சந்தித்த அஜிசுல்லா, தனக்காகப் போதைப் பொருட்களை விற்பனை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அருண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது, அஜிசுல்லா தனது நண்பர்களுடன் சேர்ந்து அருணை பலமாகத் தாக்கியுள்ளார். இதற்குப் பழி வாங்கு விதமாக, அருண், தன் நண்பர்களான ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 11வது தெருவைச் சேர்ந்த சின்ன அப்பு (எ) சத்தியமூர்த்தி (20), ஓட்டேரி பழைய வாழைமா நகர் 3வது தெருவைச் சேர்ந்த சூர்யா (19). ஓட்டேரி பிரிக்கிளின் சாலையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து அஜிசுல்லா பழிவாங்க திட்டமிட்டனர்.
இதன்படி, அஜிசுல்லாவை நோட்டம் இடதொடங்கினார்கள், அஜிசுல்லா தனியாக வரும் போது அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க அஜிசுல்லா சாலையில் ஓடியபோதும், விடாமல் துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஓட்டேரி காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று அஜிசுல்லா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பு மற்றும் சின்ன அப்பு, சூர்யா மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் நள்ளிரவில் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும், இவர்களுக்கும் ஆயுதம் வழங்கியவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கஞ்சா விற்பனை: சென்னை, வியாசர் பாடி பகுதியில் இரவு நேரங்களில், ஆட்டோ, பைக், மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, வியாசர்பாடி, காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், வியாசர்பாடி கென்னடி நகர் 1வது தெருவைச் சேர்ந்த சுரேந்திரன் (24) என்பவரைச் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், காவல்துறை கேட்ட கேள்விக்கு முன்னுக்குப்பின் முரனாகப் பதில் அளித்தார். இதில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தீவிரமாக விசாரணை நடத்தியதில், இவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டே, மூலக்கடையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் கஞ்சா மொத்தமாக வாங்கி, அதனை சிறுசிறு பொட்டலங்களாகப் பிரித்து, வியாசர்பாடி அதின் சுற்று வட்டாரத்தில் விற்பனை செய்து வருபவர் என்று தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறை, நீதிமன்றம் மூலம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!