தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் 125 பேர், மதிமுக உறுப்பினர்கள் 4 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் ஒருவர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் 2 பேர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 18 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் 4 பேர், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தலா 2 பேர், அதிமுக உறுப்பினர்கள் 66 பேர், பாமக உறுப்பினர்கள் 5 பேர், பாஜக உறுப்பினர்கள் 4 பேர் இன்று எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(11.05.21) நடைபெற்றது. முதலில், சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரிசையாகப் பதவியேற்றனர்.
முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கும்போது, 'முத்துவேல் கருணாநிதி எனும் நான்' எனக் கூறி பதவியேற்றார். அவரைத் தாெடர்ந்து அமைச்சர்களும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவி ஏற்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள்:
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக திமுக அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன் ஆகியோர் பதவியேற்கவில்லை. வரலட்சுமி, காந்திராஜன் வெங்கடாசலம், சண்முகையா ஆகிய திமுக உறுப்பினர்கள் பதவி ஏற்கவில்லை.
அதிமுகவில் வைத்திலிங்கம், இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் உடல்நலக்குறைவால் பதவியேற்கவில்லை.
இதையும் படிங்க: ’முதலமைச்சர் குணமான பிறகே அமைச்சர்கள் பதவியேற்பு’ - பாஜக தலைவர் சாமிநாதன்