தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் ,மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் பல இடங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்றும் சென்னை மண்டலா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .அக்னி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில் காலம் துவங்கியுள்ளதால், தமிழகத்தில் வெயில் கொளுத்துகிறது. 'போனி' புயல் தாக்கத்தால், காற்றில் இருந்த ஈரப்பதம் இழுக்கப்பட்டு, உஷ்ணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில், அனல் காற்று வீசும் என்றும், வெயில் உக்கிரமடையும் என்றும், வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் சுழன்ற, 'போனி' புயல், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், காற்றில் இருந்த ஈரப்பதங்களை ஈர்த்து சென்று விட்டது. அதனால், வங்கக் கடலில் புயல் சுழன்ற நேரத்திலும், கரை கடந்து விட்ட நிலையிலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.காற்றின் சுழற்சி மாறும் நிலையில், இன்னும் சில நாட்களில், ஈரப்பதமான காற்று வீசி, வெப்ப தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரும் நாட்களை பொறுத்தவரை, தமிழகத்தின் பல இடங்களில் இரு நாட்களுக்கு, அனல் காற்றின் தாக்கம் இருக்கும். சில இடங்களில், மாலை நேரங்களில், வெப்ப சலனம் காரணமாக, இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்யலாம் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னி வெயிலின் , முதல் நாளான நேற்று, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், வெயில் உக்கிரம் காட்டியது. மாலை, 5:30 மணி நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 22 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
வேலுார், 43; மதுரை, 41; சென்னை விமான நிலையம், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, பரங்கிபேட்டை, திருச்சி, 40; நுங்கம்பாக்கம், காரைக்கால், நாகை, 39: கடலுார், தர்மபுரி, சேலம், 38; நாமக்கல், புதுச்சேரி, 37; கோவை, கன்னியாகுமரி, 36; பாம்பன், 35; துாத்துக்குடி, 33; வால்பாறை, 27; குன்னுார், 26 டிகிரிசெல்ஷியஸ் வெயில் பதிவானது
சென்னையில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்ட வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் திருத்தணியில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூர், திருச்சி, மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.
சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி வரை வெப்பம் இருக்க வாய்ப்புண்டு. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .