ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப்பகுதியில் கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ராகி, கம்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்துவருகின்றனர்.
வனத்தை ஓட்டிய பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இந்த விவசாய நிலங்களில், விவசாயிகள் சாகுபடி செய்த விவசாயப் பயிர்களை பாதுகாக்க அங்கேயே குடிசை அமைத்து, இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழாண்டு பெய்த மழையால் பெரும்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது போதிய நீர் இருப்பு உள்ளது.
இதன் காரணமாக, விவசாயத்துடன் ஆடு, மாடுகளையும் பராமரித்துவருகின்றனர். ஏற்கனவே வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தை, புலி, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், அணைப்பகுதியில் தங்கியே விவசாயப் பணிகளோடு, மேய்ச்சலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக அங்குவந்த மீன்பிடி ஒப்பந்ததாரர்கள் அவர்களை தாக்கி, கோழி, ஆடுகளை திருடி செல்வதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
கரோனாவுக்குப் பயந்து அணைப்பகுதி விவசாயத் தோட்டங்களில் தங்கும் விவசாயிகளைத் தாக்கி ஊருக்குள் செல்லுமாறு வலியுறுத்துவதோடு, பெண்களை தாக்கும் ஒப்பந்ததாரர் மீது அளிக்கும் புகாரையும் பங்களாப்புதூர் காவல் நிலைய அலுவலர்கள் வாங்க மறுப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் தலையிட்டு, அணைப்பகுதி விவசாயிகளுக்குத் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!