கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. இதன் காரணமாக, கல்வி நிறுவனங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல தொழில் சார்ந்த அமைப்புகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் ரயில்,விமானம், பொது போக்குவரத்து என அனைத்து சேவைகளும் இயங்காமல் உள்ளன.
இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வேலைக்காக சென்னை வந்த பலரும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சமூக நலக்கூடம், உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டு அரசு உணவு வழங்கிவந்த நிலையில், பலரும் தங்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கைவிடுத்துவந்தனர்.
இந்த நிலையில் மே 17ஆம் தேதிவரை போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்தவர்கள் தற்போது நடந்தே சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக கிண்டியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தண்டையார்பேட்டை வழியாக விஜயவாடாவை நோக்கி நடந்தே சென்றுள்ளனர்.
தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் தன்னார்வலர்கள் சிலர் உணவு மற்றும் தண்ணீர் பொருள்கள் வழங்கியதையடுத்து, அவர்கள் சிறிது நேரம் அங்கேயே தங்கியுள்ளனர். இதையறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது ஒரு மாதமாக வேலையிழந்து தவித்துவருவதால் சொந்த ஊர் செல்வதாகவும் கூறினர்.
பின்னர், காவல் துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பகுதிக்கே அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: உணவு மறுக்கப்பட்ட அவலம்: சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்துவந்த தொழிலாளர்கள்!