சென்னை: கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த மூன்று வழக்குகளும் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் திரிபாதியால் மேல் விசாரணைக்காக ஜூன்13ஆம் தேதியன்று அன்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டன. பின்னர் சிபிசிஐடியினர் மேற்படி வழக்குகளை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சிவசங்கர் பாபாவை ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு உதவியாக இருந்த சுஷ்மிதா என்ற நடன ஆசிரியையும் ஜூன் 18ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபா-விற்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ஜூன் 19 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது சிவசங்கர் பாபா-வின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் அவரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு விரைவில் மாற்றப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை முழுமையாக சீராகும் பட்சத்தில் அவரை மீண்டும் சிறையில் அடைத்து பின்னர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், புகார் அளித்த மூன்று பெண்களை (மாணவிகள்) செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேரடியாக ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலம் பெற்று வீடியோ பதிவு செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.