சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று (பிப்.3) மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் வேளாண்மைத் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்ல வழி வகுக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
மீனவர்களை கொடூரமாகக் கொன்று குவித்து வரும் இலங்கை அரசு மீது மத்திய அரசு, பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளையும், அவர்களுக்கு ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் அடுத்துள்ள அணைக்கட்டில், கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக கரைப் பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியதற்கு காரணமான ஊழல் ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தல், விவசாயத்திற்கு அடுத்தபடியாக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள சிறுகுறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
காவிரி தென்பெண்ணை ஆற்றுப் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போவதற்கு கண்டனம் தெரிவித்தல், ஏழு தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் அலட்சியப்படுத்தி வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர்களை உடனே விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.