வழக்கத்திற்கு மாறான திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பொதுவாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்றால் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்பார்கள். ஆனால், இந்த முறை இக்கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொள்கின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயம் 'கலைஞர் அரங்கில்' நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பகுதி, ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் உள்பட சுமார் 2,000 பேர் பங்கேற்கின்றனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வியூகம்
திமுக சார்பாக 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்களது முதல் கட்ட தேர்தல் கள பரப்புரையை நிறைவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் 'தமிழகத்தை மீட்போம்' என்று மூன்று கட்ட காணொலி பரப்புரையை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரை யூகங்கள் அமைப்பது குறித்தும், கள நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நமக்கு நாமே 2.0
அதிமுக முதல்வர் வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் தங்களது தேர்தல் பரப்புரைகளை தொடங்கி உள்ள நிலையில், இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கூட்டம் என்பதால் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.