சென்னை - தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அதிக அளவில் பருப்பு, பட்டாணி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமசை்சர் எடப்பாடி பழனசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் தேவை ஆண்டுக்கு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு உள்ளதாகவும், தமிழ்நாட்டின் தட்ப வெட்ப சூழல் காரணமாக ஆயிரத்து 960 மெட்ரிக் டன் மட்டுமே விளைவிக்கப்படுதவாகவும், மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய வட மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பருப்பு, பட்டாணியை கொண்டு செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அதிக அளவில் தேவை இருப்பதால், இதை நம்பி ஏராளமான அரவை ஆலைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர், இந்த தொழிலில் 50 ஆயிரம் பேர் நேரடியாகவும், 65 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்ய நாடு முழுவதும் 1.50 லட்சம் மெட்ரிக் டன் உட்ச அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பருப்பு வகைகளுக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், பருப்பு வகைகள், பட்டாணியை தூத்துக்குடி துறைமுகம் வழியாக ரஷ்யா, கனடா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கோவைக்கு கூடுதலாக ஒரு 'நோ புட் வேஸ்ட்' வாகனம்!