சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் பாட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும், அதில் 18 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 63 விழுக்காடு பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மற்ற மலைவாசஸ்தலங்களில் 59 விழுக்காடு பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் மட்டும் 18 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களையும் சேர்த்து தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை ஏன் அமல்படுத்தக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த பாட்டில்கள் ஏரிக் கரைகளில் வீசி உடைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், '18.50 லட்சம் பாட்டில்களை எப்படி டிஸ்போஸ் செய்யப்போகிறீர்கள்' எனக் கேட்டதற்கு, அவற்றை விற்க டெண்டர் கோரியுள்ளதாகவும், இந்த டெண்டர் 10 நாள்களில் இறுதி செய்யப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும், இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைந்து திட்டம் வகுக்கப்படும் எனவும் கூறி அவகாசம் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், ஜூலை 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15க்கு தள்ளிவைத்தனர்.
மேலும், பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனியார் பார், ஹோட்டல்களும், பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப மதுவிலக்குத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: காவல் புகார் ஆணையங்கள் அமைப்பது தொடர்பான வழக்கு: முடித்துவைத்து உத்தரவு!