இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போடப்பட்ட தேசத் துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால் இன்று (5.7.2019) ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சிக்குரியதாகும்.
விடுதலைப் புலிகளை ஆதரித்து அவர் பேசிய பேச்சுகளை வைத்துப் போடப்பட்ட வழக்குகளில் விடுதலை பெற்று, அப்படிப் பேசுவது சட்டப்படிக் குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம்வரை தீர்ப்பு வழங்கிவிட்டது. இறையாண்மைக்கு விரோதமல்ல, அரசின் நடப்புகள்தான் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பவை என்ற கருத்தில்தான் அவர் பேசி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். நம் சகோதரர் வைகோ சிறைப் பறவை ஆவார், அவர் சிறைச்சாலைக்குப் போவதைக் கண்டு அஞ்சியவர் அல்லர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கருதும் துணிவின் போர்வாள் அவர்.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு கட்டாயம் செய்யப்படவேண்டுவது அவசியம். சோதனையிலிருந்து மீள வேண்டும் என்பது நமது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும். இந்தத் தீர்ப்பின்மீது சட்டப்படி மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்வரை சென்று சட்டப் போராட்டத்தினையும் நடத்திடவேண்டும். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. தந்தை பெரியார் 1938 இல் நீதிமன்றத்தில் முழங்கியதன் எதிரொலியாய்த் திகழும் நமது சகோதரருக்கு. நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்தும், பாராட்டும்.
அவரது, லட்சியப் பயணத்திற்கு நாம் என்றும் துணை நிற்போம். நாடும், நல்லவர்களும் நீதியின் பக்கமே என்றும் நிற்பர், இது உறுதி. அவர் திராவிட இயக்கப் போர்வாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.