சென்னை: சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெற்றுவருவதாகவும், அதனை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரியும் டி. விஜயபாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதைக் கையில் எடுத்துச் செயல்பட முடியாது எனக் கண்டனம் தெரிவித்து, சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம்