பெட்ரோ கெமிக்கல், பெர்டிலைசர், ரசாயனம் போன்ற பல்வேறு தொழில்துறை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சென்சாரை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
இதற்கு, ΜTMapS’ (அல்லது) ‘மல்டி பாயிண்ட் வெப்பநிலை அளவீட்டு சென்சார்’ என பெயரிட்டுள்ளனர். இதன் ஆட்டோமேட்டிக் சென்சார்கள் சரியான வெப்ப அளவீட்டை கண்டுபிடிப்பது மட்டுமின்றி விலையுயர்ந்த சாதனங்கள் அல்லது கருவிகள் சேதமடைவதற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு, ரசாயனம், மின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு உயர் வெப்பநிலை செயல்பாடு தேவைப்படுகிறது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது சவாலான ஒன்றாகும்.
இந்தப் புதிய சென்சார் மூலம் 100° செல்சியஸ் டூ 1400° செல்சியஸ் வரையான வெப்பநிலையை கணக்கிட முடியும். இந்தத் தொழில்நுட்பம் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆஃப் டெக்னாலஜி (ஐஓடி) சாதனங்கள் மூலமாகவும் நிகழ்நேரத்தில் தரவை உருவாக்குகிறது.
இதுகுறித்து ஐ.ஐ.டி மெட்ராஸின் பேராசிரியரான கிருஷ்ணன் பாலசுப்பிரமணியம் கூறுகையில், "உலோகங்கள் உருக்கும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் அதிகப்படியான வெப்பநிலை தேவைப்படுகிறது. முழு ஆலையிலும் சீரான வெப்பநிலை இருந்திட வேண்டும். அப்போதுதான், தயாரிப்புகளில் பாதிப்பின்றி உருவாக்கிட முடியும். இருப்பினும், இது மிகவும் சவாலான விஷயம் என்பதால் புதிய சென்சாரை தயாரிக்கும் முயற்சியில் ஐஐடி மெட்ராஸ் களமிறங்கி வெற்றிகரமாக சாதித்துள்ளது" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தை ஐ.ஐ.டி மெட்ராஸூக்கு சொந்தமான ஸ்டார்ட்-அப் நிறுவனம் சைமா அனலிட்டிக்ஸ்' பெயரில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஒரு ஆண்டாக இந்திய தொழில்துறையின் தடையின்றி செயல்பட தேவையான சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது அடுத்த ஓராண்டுக்குள் இந்திய மற்றும் வெளிநாட்டு உற்பத்தி சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்
இந்த சென்சார்கள் மூலம் உருவாக்கப்படும் தரவை செயற்கை நுண்ணறிவு மூலம் கணக்கிட்டு, ஆலைகளின் செலவுகளை குறைப்பது மட்டுமின்றி செயல்திறனை பெரிதும் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகும். இந்த சாதனத்திற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.