கரோனா தொற்று காலகட்டத்தில்தான், ஐஐடி சென்னை மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஐஐடி சென்னை இந்தாண்டு ப்ரீ-பிளேஸ்மென்ட்டில் (முன் வேலைவாய்ப்பு) புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கரோனா காலமான 2020-21ஆம் ஆண்டில்தான் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் மாணவர்களுக்கு வந்துள்ளன. இந்தாண்டில் மட்டும், சுமார் 182 வேலைவாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், கடந்தாண்டு 170 வேலைவாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன.
இந்த வளாக நேர்காணல் நாளைமுதல் ஐஐடி சென்னையில் தொடங்கவுள்ளது. அதிகப்படியான வேலைவாய்ப்பு வருவதற்கு முக்கியக் காரணமாக இன்டர்ன்ஷிப் திட்டம் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, தொற்று நோய் காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக இன்டர்ன்ஷிப் டிரைவ் முழுவதுமாக ஆன்லைனில் நடத்தப்பட்டன. இன்டர்ன்ஷிப் காரணமாக, அதிகப்படியான மாணவர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இது குறித்து பேசிய ஐஐடி சென்னையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகரும் பேராசிரியருமான சி.எஸ். சங்கர் ராம் கூறுகையில், "இந்தாண்டு முன் வேலைவாய்ப்புச் சலுகைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஐஐடி சென்னை மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
இந்த எண்ணிக்கை உயர்வு அடுத்தாண்டு நிச்சயம் மேலும் அதிகரிக்கும். முதல்கட்ட வேலைவாய்ப்புகளில், நல்ல நிறுவனங்களில் மாணவர்கள் இடம்பிடிப்பார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், இன்டர்ன்ஷிப் டிரைவின் முதல்நாள் (ஆகஸ்ட் 30, 2020) ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. 17 நிறுவனங்கள் கிட்டத்தட்ட பங்கேற்று 140 இன்டர்ன்ஷிப் சலுகைகளை வழங்கின. ஆனால், 2019ஆம் ஆண்டில் முதல் நாளில் 147 இன்டர்ன்ஷிப் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஐ.ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்புகள்
ஆண்டு | எண்ணிக்கை |
2016-17 | 73 |
2017-18 | 114 |
2018-19 | 135 |
2019-20 | 170 |
2020-21 | 182 |
அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் வழங்கிய நிறுவனங்கள்:
- டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் - 12
- மைக்ரோசாஃப்ட் - 12
- குவால்காம் - 10
- கோல்ட்மேன் சாச்ஸ் - 9
- அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் - 9
அதிகபட்சமாக தகவல் தொழில்நுட்பத் துறையில்தான் 49 விழுக்காடு வேலைவாய்ப்புகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.