சென்னை: இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் தனித்துவமான, ஆற்றல்மிக்க, சிக்கனமான வேளாண் போக்குவரத்து சாதனத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். 'இலகுரக மோனோ ரயில்’ போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண் விளைபொருட்களை அருகில் உள்ள சேகரிப்பு மையங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும்.
விவசாயிகளின் பாரம் குறையும்: கரூர் மாவட்டம், நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பண்ணையில் முன்வடிவ கம்பிவட சாதனத்தை (Prototype Cableway System) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தனர். விவசாயப் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை, இந்திய வேளாண் நடைமுறையை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அறுவடைக்குப் பிந்தையக் காலங்களில் வேளாண் விளைபொருட்களான கரும்பு, வாழைத்தார் (அ) நெல் போன்றவற்றை வயல்களில் இருந்து அருகிலுள்ள சேகரிப்பு மையத்திற்குக் கொண்டு செல்ல அதிகளவில் ஆட்கள் தேவைப்படும்போது இந்தப் பிரச்சனை மேலும் கடினமாக இருக்கும்.
தலைச்சுமைக்கு இனி தீர்வு: தண்ணீர் தேங்கியுள்ள நன்செய் நிலங்களை தொழிலாளர்கள் தலைச்சுமையாகக் கடக்க வேண்டியிருப்பதால் விளைபொருட்களை வெளியில் கொண்டுவருவதில் சிரமம் அதிகமாக இருக்கும். இதற்குத் தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் சங்கர் கிருஷ்ணப்பிள்ளை, விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து இந்த சிக்கனமான, எளிமையான போக்குவரத்து சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
'இலகுரக தொங்கு ரயில் கருத்துரு': இதுகுறித்து சங்கர் கிருஷ்ணப்பிள்ளை கூறும்போது, வரும் ஆண்டுகளில் அறுவடைக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள கடுமையான ஆள்பற்றாக்குறையை விவசாயிகள் சந்திக்க நேரிடும். இலகுரக தொங்கு ரயில் கருத்துரு அடிப்படையில் உள்ளூர் பட்டறைகளில், தங்கள் பகுதியில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டு எளிய முறையில் வேளாண் போக்குவரத்து சாதனத்தை உருவாக்க முடியும். விவசாயப் பண்ணைகளில் இதனை எளிதாக நிறுவி, விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் தொழிலாளர்களின் தேவையைக் குறைக்கலாம். தரைக்கு மேலே இந்த சாதனம் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இடையூறுகளும் மிகக் குறைவாகவே இருக்கும்.
சூரிய மின்சக்தியிலும் இயக்கலாம்: திட்டமிடப்பட்டு உள்ள இந்த வேளாண் சாதனம் மிக எளிதான வடிவமைப்பு கருத்துருவையும், உதிரிபாகங்களையும் கொண்டதாகும். எந்தவொரு உள்ளூர் பண்ணைகளிலும், இதனை எளிதாக செயல்படுத்தலாம். தண்டவாள அமைப்பிலான கம்பிகளையோ, கம்பங்களையோ கூடுதலாக சேர்த்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரம்பை எளிதாக நீட்டித்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், சூரியஒளி மின்சக்தியில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பவர்பேக் மூலம் டிராலிகளை இயக்க முடியும் என்றார்.
இதன் நன்மைகள்: வேளாண் பணிகளில் உள்ள மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு எளிதான, குறைந்த செலவில் தீர்வு கிடைக்கிறது.
- வேளாண் விளைபொருட்களை சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல, வழக்கமான முறையில் தலைச்சுமையாக தூக்கி செல்லும்போது, சிறிய பண்ணையில் நாள் ஒன்றுக்கு 32 பேரைப் பணிக்கு அமர்த்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
- ஆனால், புதிய போக்குவரத்து சாதனத்தை ஈடுபடுத்தும்போது, இதே வேலையைச் செய்வதற்கான விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 நபர்களாக குறையும்.
- சேகரிப்பு மையங்களுக்கு தலைச்சுமையாக விளைபொருட்களை குறிப்பாக பழங்களை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதங்களைத் (bruising of fruits) தவிர்க்க இந்த போக்குவரத்து சாதனம் உதவுகிறது.
- வாழைப் பழங்களை சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லும்போது அடிபட்டு சேதம் ஏற்படுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக கணிசமான இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.
- இந்தப் போக்குவரத்து சாதனத்தை நிறுவ, குறைந்த அளவு இடம் மட்டுமே தேவைப்படுகிறது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இயக்கப்படுவதால் பயிர்களுக்கும் இடையூறு இருக்காது.
- எனவே, இந்தப் போக்குவரத்து சாதனத்தைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலில் மிகக் குறைந்த அளவே தாக்கம் ஏற்படுகிறது.
- ரயில்தண்டவாள அமைப்பில் இயக்கப்படுவதால் வழக்கத்தைவிட இதில் எரிசக்திப் பயன்பாடு குறைவு.
- இதனை இயக்க, இரு முனைக்கும் தலா ஒருவர் என இரண்டுபேர் இருந்தாலே போதுமானது. எனவே, இப்போக்குவரத்து சாதனத்தை இயக்குவதற்கான செலவு குறைவாகவே இருக்கும்.
எவ்வாறு இயங்கும்: இந்த போக்குவரத்து சாதனம் பண்ணையோர நெடுகிலும் கான்கிரீட் அடிப்பகுதியுடன் கூடிய இரும்புக் கம்பங்களை (Steel Posts Erected on Concrete Shoes) நடும் எளிய உள்நாட்டு வடிவமைப்பைக் கொண்டதாகும். 6 மீட்டர்கள் இடைவெளியுடன் இந்த கம்பங்கள், வலிமையுடன் கூடிய 'இலகுரக தண்டவாள அமைப்பு' மூலம் இணைக்கப்படும்.
தண்டவாள அமைப்பாக நீளும்: பெட்ரோல் இன்ஜீனைக் கொண்டு முன்னும் பின்னும் இயக்கப்படும், இழுவை அலகு மூலம் வேளாண் விளைபொருட்கள் ஏற்றிச் செல்லப்படும். ஒவ்வொரு டிராலியும், ஏறத்தாழ 40 கிலோ எடைக்கொண்டப் பொருளை அதாவது, தலைச்சுமையாகக் கொண்டு செல்லும் அளவுக்கு ஏற்றிச் செல்லக் கூடியவை. தண்டவாள அமைப்பை அவ்வப்போது தேவைப்படும் தூரத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில், பொது விவசாயிகள் சங்கத் தலைவர் டி.என்.சிவசுப்பிரமணியத்தின் விவசாய நிலத்தில் இந்த போக்குவரத்து சாதனம் நிறுவப்பட்டது. சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் இந்த சாதனம் நிறுவப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..