சென்னை ஐஐடியில் இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பில், 'சென்னை ஐஐடியில் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பத் திருவிழாவான 23-வது சாஸ்த்ரா விழா நாளை 26-ம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 4 நாட்கள் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை பரிசோதிக்கும் வகையிலும், அதனை மேம்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் நடைபெறும் சாஸ்த்ரா என்னும் தொழில்நுட்ப விழா நடைபெறுகிறது. இது கல்வி நிறுவனத்திற்கும், தொழில் துறைக்கும் இணைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்துகிறது.
இந்த ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உலக நாடுகளுக்கு முன்மாதிரியான விண்வெளி ஆராய்ச்சியினை மாணவர்கள் மேற்கொள்ள உதவும். இதேபோல் ஆடை தயாரிப்பில் சுற்றுச்சூழலிற்குப் பாதிப்பில்லாத ஆடை உற்பத்தி முறை குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.
சென்னை ஐஐடியில் உள்ள தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பம் சார்ந்து நிறுவனம் எப்படி செயல்படுவது மற்றும் நிகழ்ச்சி குறித்தும் அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் சென்னை ஐஐடியின் 16 துறையில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஜூனியர் மேக்கத்தான் என்ற போட்டியும் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே பள்ளிகளில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து போட்டி நடத்தப்பட்டது. இதில் 1000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வு மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர். மேலும் கண்டுபிடிப்புகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதன் கல்வி மற்றும் கலாசார நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கல்வி சார்ந்து Role of digital technology in education என்ற தலைப்பில் மொத்தம் 29 நாடுகளில் இருந்து கலந்துகொள்ளும் கருத்தரங்கம் ஜனவரி 31ஆம் தேதி ஐஐடியில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து உலகளவில் கல்விமுறையை விளக்கும் வகையில் பிப்ரவரி 1, 2 ஆகியத் தேதிகளில் நடைபெறும் கண்காட்சியை காலை 10 மணி முதல் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 50% குழந்தைகளுக்கு சுவாசத் தொற்று.. பெற்றோர் செய்ய வேண்டியது என்ன