சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அதிகளவில் விண்ணப்பம் செய்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 1 லட்சம் என்ற அளவிலேயே மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் பொறியியல் கல்லூரிகளை, கலை மற்றும் அறிவியியல் கல்லூரியாக மாற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு மோகம் குறைந்துள்ளது.
பொறியியல் படிப்பில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கு 1,74,930 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில் தகுதியான 1,45,045 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொறியியல் படிப்பில் 440 கல்லூரிகளில் 1,51,870 இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 95,336 மாணவர்கள் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்தனர்.
விண்ணப்பங்கள் விவரம்: அவர்களில் 81,433 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதன் பின்னர் வேறுபடிப்புகளில் இடம் கிடைத்ததால், பொறியியல் படிப்பை விட்டு 13,903 மாணவர்கள் வெளியேறினர். இதனால் 2021 ஆம் ஆண்டு கலந்தாய்வில் மட்டும் 70,437 இடங்கள் காலியாக இருந்தன. 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
ஜூலை 6 ஆம் தேதி வரையில் 1,47,947 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,00,923 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். அதில் 69,615 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். அதேநேரம் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்பாடமல் உள்ளது.
பாடத்திட்டம் மாற்றம்: எனவே சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. இந்நிலையில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைவது குறித்தும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், “பொறியியல் படிப்பில் தற்பொழுது உள்ள தேவையை பொறுத்து, கம்ப்யூட்டர் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளிலும் புதிய பாடப்பிரிவுகளை தொடங்கியுள்ளோம். மேலும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களும் புதிய பாடப்பிரிவை படிக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் எந்த பாடப்பிரிவில் படித்தாலும் கம்ப்யூட்டர் அறிவை பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பொறியியல் படிப்பில் எந்தப் பிரிவில் சேர்கிறோம் என்பதை விட, நல்ல கல்லூரியில் எந்தப்பிரிவு எடுத்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கும். இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள், தொழிற்சாலைக்குத் தேவையான வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் படிக்கும் போது நன்றாக படித்தால் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
கவலை வேண்டாம் மாணவர்களே.. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் கல்வி உதவித்தொகையை அளிக்கின்றனர். எனவே இடம் கிடைத்தால் பணம் இல்லை என சேராமல் இருக்காதீர்கள். கல்வி உதவித்தொகையின் மூலம் படிக்கலாம். பொறியியல் படிப்பில், மாணவர்களுக்கு 7 அல்லது 8 ஆவது பருவத்தில் தொழிற்சாலைகளுக்குச் சென்று ஆறு மாதம் பயிற்சி பெறும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மாணவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்பினை பெற முடியும். இதற்கான பயிற்சியை ஏற்படுத்தி தருவோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் உள்ளதுபோல் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக தொழிற்கல்வி படித்தவர்கள்தான் தேவை. எனவே தொழிற்கல்வி படிப்பிற்கான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 ஆவது ஆண்டில் படிக்கும் போது, தொழில் திறமை வளரும் வகையில் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்தவர்களுக்கு பொறியியல் படிப்பில் 2% இடம் அளிப்பதால் 3,000 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி