தேசிய அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார்.
இதற்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு பெயர் மாற்றுவது பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தது. நேற்று (செப்.28) செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதில் மாற்றமில்லை என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அருள் அறம் கூறியதாவது, "அண்ணா பல்கலைக் கழகம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பெயரை தற்போது மாற்றக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து பெயரை மாற்றுவது ஏற்க முடியாது.
பல்கலைக்கழகம் குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திருத்த மசோதாக்களை ஆளுநர் திருப்பியனுப்ப வேண்டுமென வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தின் நகல் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்டரீதியாக இப்பிரச்னையை அணுக இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக எம்பி ஆ.ராசா உள்பட 1050 பேர் மீது வழக்குப்பதிவு