"லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து" இந்த வாசகத்தை எங்கு கேட்டாலும், பார்த்தாலும் சகாயம் ஐஏஎஸ்ஸின் முகம் தோன்றும். நேர்மை என்றால் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்த (இருக்கும்) அரசுப் பணியாளர்கள் மத்தியில், நேர்மையாய் இருப்பதே சிறந்த பணி என்று செயலாற்றியவர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகேயுள்ள பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்த சகாயம் பெருஞ்சுனையில் பள்ளிப்படிப்பையும், புதுக்கோட்டையில் (இளங்கலை தமிழில்) பட்டப்படிப்பையும் படித்துவிட்டு, லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலேயே சட்டப்படிப்பையும் படித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்ச்சி பெற்ற அவர், பின்னர் பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ் அலுவலராக, தர்மபுரியில் சார் ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கூடலூரில் சார் ஆட்சியர், திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அலுவலர், திருச்சி உணவுப் பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 23 ஆண்டுகளில் 24 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக அதாவது மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தபோது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், நாமக்கல், மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, தனது சொத்து விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கினார். இவ்வாறு சொத்து விவரத்தை வெளியிட்ட முதல் தமிழ்நாட்டு ஐஏஎஸ் அலுவலர் சகாயம் ஆவார்.
மிக முக்கியமாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தபோது கட்சி வேறுபாடின்றி அனைவரது பொல்லாப்புக்கும் ஆளானார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க அவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டபோது, அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சுடுகாட்டில் படுத்துறங்கி சகாயம் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.
இதனையடுத்து கோ-ஆப்டெக்ஸ்க்கு மாற்றப்பட்ட அவர், பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து, அவற்றை மீண்டும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். அதேபோல் நஷ்டத்தில் இயங்கிவந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபமிகு வர்த்தக நிறுவனமாக மாற்றிக்காட்டியது, வேட்டி தினம் போன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் அப்போதைய தமிழக கைத்தறி அமைச்சர் கோகுல இந்திரா கோ - ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தனக்கு அறை ஒதுக்கி தரும்படி கேட்டதாகவும் அதற்கு சகாயம் மறுத்ததாகவும் அதனால்தான் அவர் அங்கிருந்து, இந்திய (மருந்து மற்றும் ஹோமியோபதி) மருத்துவத் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதே சமயம், தனது சாதியினர் மேல் சகாயம் பரிவு காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. மதுரை ஆட்சியராக இருந்தபோது, தனது உறவினர் ஒருவர் மீது வழக்கு பதியாமல் இருக்க சகாயம் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு சென்னையிலுள்ள அறிவியல் நகர துணைத் தலைவராக இருந்த சகாயம் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் செல்ல கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு நேற்று அவரை பணியிலிருந்து விடுவித்துள்ளது.
சகாயத்தின் அடுத்த பிளான் அரசியல்?
சகாயம் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியும், அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று கோரிக்கையும் எழுந்தபோது, "ஊழலை எதிர்த்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன். அதை இச்சமூகம் உறுதி செய்யும்" என்று கூறினார். மேலும், மக்கள் பாதை என்ற அமைப்பு அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட்ட நிலையில், தற்போது அவர் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்காமல் அமைதி காத்து வருகிறார்.
இந்த சூழலில், விருப்ப ஓய்வு பெற்றுள்ள தான் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சகாயம் கூறியிருப்பதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர். அதேசமயம், சகாயம் அரசியலுக்கு வந்தால், அவரால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
அண்ணாமலை ஐபிஎஸ் காவி பாதையை தேர்ந்தெடுக்க, சசிகாந்த் ஐஏஎஸ் கதர் பாதையை தேர்ந்தெடுக்க சகாயம் மய்யப் பாதையை தேர்ந்தெடுப்பார் என்றும் ஆரூடம் சொல்லப்படுகிறது. ஆனால் மய்யப் பாதையை தேர்ந்தெடுத்தால், அது கமல் பாதையின் நகல் என்ற பேச்சு அடிபடும் என்பதால் சகாயத்தின் பாதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் சமுத்திரகனி, அமீர் போன்றோர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சகாயத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சர்கார் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சகாயத்தை மனதில் வைத்துதான் அமைக்கப்பட்டதென்ற பேச்சும் பரவலாக எழுந்தது.
இளைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தாலும், அவரது சித்தாந்தம் எப்படி இருக்குமென்ற கேள்வி எழுகிறது. இளைஞர்கள் மத்தியில் ஊழலற்ற அரசு அமைய வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், சமத்துவ சமூகம் வலுப்பெற வேண்டுமென்ற எண்ணமும் தற்போது மேலோங்கியிருக்கிறது. ஊழல், லஞ்சம் குறித்து பல சமயங்களில் சகாயம் பேசியிருந்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்க அவர் கொடுக்கும் உத்தரவாதம் என்ன என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.
இட ஒதுக்கீடு, மாநில அதிகாரம், தன்னாட்சி, இந்தி எதிர்ப்பு போன்ற திராவிட அரசியலின் அடிநாதக் கொள்கைகளை அவ்வப்போது பேசும் சகாயம், அதேசமயம் தமிழ், தமிழர், தமிழீழம் போன்ற தற்கால தமிழ்த் தேசியர்களின் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார். இதனால் அவரது பாதை குறித்து அறுதியிட்டுக் கூற முடியாத நிலை நீடித்துவருகிறது.
ஆனால், ஊழலற்ற தமிழ்ச் சமூகத்தை உருவாக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேனென மநீம தலைவர் கமல் ஹாசன் முஷ்டி முறுக்கிக்கொண்டிருக்க, தமிழ்த் தேசியம் அமைத்தே தீருவோம் என்று சீமான் கொந்தளித்துக் கொண்டிருக்க இந்த இரண்டையும் இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு அரசியல் அரிதாரம் பூச வரும் சகாயத்திற்கு அரசியல் சகாயம் செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.