சென்னை: திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தின் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
மற்ற விதிமீறல்களைப்போல சம்பவ இடத்தில் அபராதம் வசூலிக்காமல், குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கும், வாகன ஓட்டிகள் நீதிமன்றம் மூலம் போக்குவரத்து காவல்துறை சார்பில் அபராதத்தொகையை, செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்றை சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி, அபராதத்தை வசூலித்து வருகின்றனர்.
ஆனால், ஏராளமான வாகன ஓட்டிகள் அபராதத்தொகையை செலுத்தாமல் தட்டிக்கழித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் வாரண்ட் நோட்டீஸிற்கு, 14 நாட்களுக்குள் அபராதத்தொகையை சம்மந்தப்பட்ட நபர்கள் செலுத்தவில்லை என்றால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்வரை, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 50 கார்களின் உரிமையாளர்கள், அபராதத்தொகையை செலுத்தாமல் இருந்து வரும் நிலையில் அவர்களின் கார்களைப்பறிமுதல் செய்து, ஏலத்திற்கு விடவுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நெஞ்சு வலினு ஹாஸ்பிட்டல் போறேன்...ஹெல்மெட் இல்லைனு ஆயிரம் ரூபாய வாங்கிட்டாங்க': முதியவரின் வேதனைக்குரல்