சென்னை: ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியத்தில் வெளிநாட்டிற்குச் சிலைகள் கடத்தப்படுவதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வெளிநாட்டிற்குச் சிலை கடத்த திட்டம்
தகவலின்பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில்,தொன்மைவாய்ந்த பல சிலைகள் வெளிநாட்டிற்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடி உயரமுள்ள திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை, சிறிய நடராஜர் சிலை, சிறிய கிருஷ்ணர் சிலை, பௌத்த மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய 11 பேழைகள் பறிமுதல்செய்யப்பட்டன. எந்தக் கோயிலிருந்து சிலைகள் இது என்பது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதே எம்போரியத்தின் கடைக்கு வெளியே ஒரு உலோகச் சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஏடிஜிபி நேரடியாகச் சென்று கடைக்கு வெளியே புதைக்கப்பட்டிருந்த கஜ சம்ஹார மூர்த்தி சிவன் சிலையை மீட்டனர். இந்தச் சிலையை சோதனைக்கு முன்னரே சிலர் மண்ணில் புதைத்துவைத்திருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.
அருங்காட்சியக உரிமையாளர் தலைமறைவு
இது குறித்து எம்போரியம் நிறுவன அலுவலர்களிடம் நடத்திய விசாரணையில், 1985ஆம் ஆண்டு முதல் கலைநயமிக்கச் சிலைகள், பொருள்களை விற்றுவருவதாகவும், பறிமுதல்செய்யப்பட்ட சிலைகள் டெல்லியிலிருந்து வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்தச் சிலைகள் தொடர்பாக எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சிலைகள், கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைப் பிடித்த பிறகே சிலை வாங்கப்பட்ட இடம் குறித்து தெரியவரும் எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'