புராதன மற்றும் கலை பொக்கிஷங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்கிறது. அதே போல் அச்சட்டத்தின் 26ஆவது பிரிவின் படி மத்திய அரசின் அலுவலர் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர உத்தரவிடக் கோரி சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 531 சிலைக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 பேர் கைது செய்யப்பட்டு ஆயிரத்து 125 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.
100 ஆண்டுகள் பழைமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளை கடத்துபவர்களுக்கான சிறை தண்டனையை குறைந்தபட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை அதிகரிக்க வேண்டும். தொல்லியல் துறையில் போதுமான அலுவலர்கள் இல்லாத காரணத்தால் கடத்தப்பட்ட சிலைகளை பறிமுதல் செய்வது, வழக்குகள் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை ஆய்வாளர் அந்தஸ்த்துக்கு குறையாத அலுவலர்களுக்கு மேற்கொள்ள உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது இந்த வழக்கு இன்று நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 'கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்' - அக்னி பிழம்பாய் வெடித்த நித்யானந்தா