சென்னை: ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவன்அருள் (57). ஐஏஎஸ் அலுவலரான இவர், தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத்துறை ஐஜியாகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சுமதி (53) என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், மனிஷா என்ற மகளும் உள்ளனர். மகன் சச்சின் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இன்று (நவ.2) காலை சிவன்அருள் வழக்கம்போல், அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். மகன் சச்சின் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த சுமதி கழிவறைக்குச் சென்று வெகு நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், உடனே அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
கடிதம் எழுதி வைத்து தற்கொலை
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
மேலும் அவரது கையில் ரத்தக்கறை படிந்த பிளேடு ஒன்று இருந்துள்ளது. சுமதியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சுமதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் அவரது அறையில் தலையணைக்கு கீழே எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல எனவும் எழுதப்பட்டிருந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை
குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆறு மாதங்களாக சுமதி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.
கடலூரில் வசித்து வந்த சுமதியின் தாயார் கரோனா தொற்றால் உயிரிழந்த பிறகு, அவரது குடும்பத்தினரிடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு