கத்தாரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகள போட்டியில் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து 800மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் முறையாக தங்கம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மதுரவாயலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் போட்டியில் பல்வேறு தடைகளுக்கு பின்னரே பங்கேற்றதாகவும் தனது சொந்தப் பணத்தில் இந்தப் போட்டிக்கு தயாராகிச் சென்றதாகவும் கூறினார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருப்பதாகவும் இதற்கு தமிழக அரசு உதவி செய்தால் தடகளப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேனென்றும் உறுதியளித்தார்.
அதுமட்டுமின்றி, வறுமை காரணமாக தனது தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவை உண்டதாகவும் அழுதுகொண்டே தெரிவித்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.