சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், 2011ஆம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் தோபு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இருப்பினும் இவரது பெயர் அதிமுக அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக தலைமை அவருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்காமல் நிராகரித்தது.
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவு
இதனால் அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை.11) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
![செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12424485_thoppu.jpg)
அப்போது ஈரோடு மாவட்டத்தை திமுகவின் ’எஃகு கோட்டையாக’ மாற்றுவேன் என தோப்பு வெங்கடாச்சலம் சூளுரைத்தார்.
திமுக ஒரு ஆலமரம், இதில் நாங்கள் பறவைகள்...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், “ஊழலற்ற, நேர்மையான அரசைக் கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சரின் தொலைநோக்கு செயல்பாடு எங்களை ஈர்த்தது.
ஆட்சிக்கு வந்த பின்னர் பழிவாங்கும் மனப்பான்மையுடன் செயல்படாமல், மாற்றுக்கட்சியினரிடம் உள்ள நல்ல கருத்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறார். திமுக ஒரு ஆலமரம், இதில் நாங்கள் பறவைகள் போல் அடைக்கலம் தேடி வந்துள்ளோம்” என்றார்.
பழனிசாமி சர்வாதிகாரி, ஓபிஎஸ் ரப்பர் ஸ்டாம்ப்...
இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம் பேசுகையில், “அதிமுக ஒரு சாதிக்கட்சியாக மாறி விட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். ஓபிஎஸ் பதவி கிடைத்தால் போதும் என ரப்பர் ஸ்டாம்ப் ஆகிவிட்டார்” எனக் கடுமையாக சாடினார்.
தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 125 நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவை சிறப்பா வழி நடத்துறாங்க...எஸ்.பி. வேலுமணி தீர்க்கம்