சென்னை: பாடி கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் அச்சுதானந்தன். இவரது மனைவி மனோ பாரதி (37). மனோ பாரதி கிண்டியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவ்விருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இத்தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அச்சுதானந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றுவதுடன், தினமும் மது அருந்த பணம் கேட்டு மனைவியை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து மனோபாரதி, மத்திய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் தனது அக்கா ஞானசித்ராவிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது உதவி ஆய்வாளர் ஞானசித்ரா, புகாரளித்து சிறையில் தள்ளிவிடுவதாக அச்சுதானந்தனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அச்சுதானந்தன், தனது மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை (ஜூலை 2) குடிபோதையில் வீட்டிற்கு வந்த அச்சுதானந்தன், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மனோ பாரதியை மீட்ட உறவினர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மனோபாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அச்சுதானந்தனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சின்ன மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது