கரொனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முயற்சியில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை பின்வரும் முறைகளை பின்பற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணமாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து பயன்படுத்திய முகக்கவசங்கள், கையுறைகள், திடக்கழிவுகள் அனைத்தையும் தனியாக ஒரு மஞ்சள் பையில் சேகரித்து தினந்தோறும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் இதர திடக்கழிவுகளின் மீது கிருமி நாசினியான சாதாரண 5% பிளீச்சிங் பவுடர் கரைசல் அல்லது ஒரு சதவிகித சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசலைத் தெளித்து மஞ்சள் நிற பைகளில் சேகரித்து அதனை மூடும் வகையில் உள்ள தொட்டியில் பாதுகாப்பாக வைத்து வீடுதோறும் வரும் தூய்மை பணியாளர்களிடம் தினந்தோறும் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான மஞ்சள் நிற பைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும்.
இதன் மூலம் வைரஸ் தொற்றைத் தடுத்து சென்னை மாநகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் பாதுகாப்பின் அவசியம் கருதி மேலே குறிப்பிட்ட முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க...தொற்று இருக்கா? இல்லையா? - கன்ஃபியூஸான அலுவலர்களின் அலட்சியத்தால் விழுப்புரத்தில் மாயமான டெல்லி இளைஞர்