இட நெருக்கடியை குறைக்கும் விதமாக பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒரு துணைக்கோள் நகரம் உருவாக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருமழிசையில் 311 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 121 ஏக்கர் நிலங்களில் தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் வெளிப்படையாகவும் சாமானிய மக்களால் பயன்படுத்தக்கூடிய அளவிலும் வீடுகளுக்கான விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக புதிய சாலைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என்றார்.
நிலம் கையகப்படுத்தலில் சில சிக்கல்கள் இருந்ததாலேயே துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான காலதாமதம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து பாஜக - அதிமுகவின் கூட்டணி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இனிவரும் காலங்களிலும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு அளித்த விளக்கமே போதுமானது என்று கூறிய அவர், தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதனை நிரூபிக்கும் வகையிலே கீழடியின் கண்டுபிடிப்புகள் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார்.