சென்னை: ஆவடி அடுத்த வெள்ளனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (52). இவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த 4ஆம் தேதி இரவு 1 மணியளவில் சிவாவிற்கு நெஞ்சு வலி காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குச் சேர்த்த அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மறுநாள் அவரது இறுதிச் சடங்கு முடிந்து நிலையில் பின்னர் அவர் அணிந்திருந்த நகையைப் பரிசோதித்தபோது அவர் கையில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க வளையல் காப்பு காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு, மருத்துவ நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளித்து 25 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டுத் தரக் கோரி அம்பத்தூர் நீதிமன்ற சங்க வழக்கறிஞர்களுடன் சென்று புகார் அளித்தனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மருத்துவமனையில் பணிபுரியும் செவிலி அவர் அணிந்திருந்த நகையைக் கழட்டி வைத்ததாகத் தெரிவித்துள்ளார். தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறிய நிலையில் அங்கு பணியிலிருந்த மருத்துவர் அது தங்கமா இருக்காது ஈயமோ..? பித்தளை எனக் கூறிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் சிவனிடம் கேட்டபோது, இரண்டு நாட்களில் உங்கள் நகையைத் திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து மீண்டும் கேட்டபோது, தன்னிடம் நகை இல்லை என அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனால், கடந்த 10ஆம் தேதி திருமுல்லைவாயில் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
திருமுல்லைவாயில் காவல் துறையினர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மருத்துவமனைக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து நகையை மீட்டுத் தரக்கோரி ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அம்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 கடைகளில் திருட்டு; திருடிய கடையிலேயே ஹாயாக ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ!