சென்னை: மாஸ்டர் மகேந்திரன் சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில், ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் இவர் பேசிய வசனங்கள் இன்று வரை மீம்ஸ் டெம்ப்ளேட் ஆக வலம் வருகின்றன. இப்படி ஏராளமான படங்களில் நடித்தவர், தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். மேலும் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன வயது தோற்றத்தில் நடித்திருந்தார். அதில் சின்ன பவானியாக நடித்த இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, இப்போது இவருக்கு ‘ரிப்பப்பரி’ என்ற படம் வெளியீட்டுக்கு ரெடியாக உள்ளது. அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ள இப்படம், வரும் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள ரிப்பப்பரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நந்தவனம் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வந்த குழந்தைகள் முன்னிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று ( ஏப்.08 ) வெளியிடப்பட்டது. இவ்விழாவில் மாஸ்டர் மகேந்திரன், நடிகை காவ்யா, ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ரிப்பப்பரி படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அருண் கார்த்திக் கூறுகையில்,“ படத்தை தயாரித்து இயக்குவதற்கு ஒரு பயம் இருந்தது. இந்த படத்தின் கதை தான் நம்பிக்கை கொடுத்தது. இறுதிவரைக்கும் எந்த தடங்கலும் இன்றி அதன் இலக்கை அடைய நல்ல கதை மட்டும் போதாது, நல்ல மனிதர்களும் வேண்டும். இப்படம் திரைக்கு வருகிறது என்றால் என்னுடைய டீம்தான் அதற்கு காரணம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய இடத்தை அடைவார்கள். இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன் பாடல்களுக்கு கேரளாவில் அனைவரும் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.
சாதி வேண்டாம் என்பதே எங்களது குறிக்கோள். எனது கருத்தை யார் தடுத்தாலும் சொல்வேன். இது ஜனநாயக நாடுதான். இப்படத்தில் பேய்க்கு சாதி பிடித்துள்ளதாக காட்டியிருப்பது எதனால் என்றால், சாதி பேய் யாரையும் பிடித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான். மாஸ்டர் மகேந்திரன் லேபில் படத்துக்கான கெட்டப்பில் இருப்பதால் மாஸ்க் கழட்டவில்லை மன்னிக்கவும். இப்படத்தில் நிறைய திறமையான நபர்கள் பணியாற்றியுள்ளது இங்கு வந்துதான் பார்த்தேன். தமிழ்ப் புத்தாண்டு என்று என் படம் வெளியாகிறது. மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை" - டிரெண்டாகும் செல்வராகவன் தத்துவம்!