சென்னை: சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மத்திய உள்துறையிடம் விரிவான அறிக்கை சமர்பித்தது. மேலும், கைதிகளுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் நடவடிக்கையை மாநில அரசும் பின்பற்றலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றவாளிகளையும், மற்ற குற்றவாளிகளையும் தனியாக பிரிக்க வேண்டும். மேலும், தற்காலிக விடுதலை அல்லது பரோல் விடுப்பில் உள்ள கைதிகளை கண்காணிக்கும் வகையில், அவர்கள் மீது ஜிபிஎஸ் மின்னணுக் கருவிகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், கைதிகளின் நடமாடத்தை கண்காணிக்கும் இந்த ஜிபிஎஸ் கருவியை அணிய விருப்பம் தெரிவித்த கைதிகளுக்கு, சிறையில் இருந்து விடுப்பு அளிக்கலாம். அவர்கள் வெளியில் சென்ற பிறகு விதியை மீறி கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்த ஒரு சிறை சலுகைகளும் கைதிக்கு வழங்குவது ரத்து செய்யப்படும்.
மேலும், பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளை கண்காணிக்கும் வகையில், அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை மாநிலங்கள் பொருத்தலாம். அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிலைகளில் அடைக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய நடவடிக்கைகளால் சிறைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சிறைகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பிற்காகவும், சிறை நிர்வாகம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக தரவுகளை ஒன்றிணைக்க வேண்டும்.
அதேபோல், சிறைக்குள் செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு செல்லுலார் ஜாமரை அமைக்க வேண்டும். சிறைக்குள் தொலைபேசி பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 25 ஆயிரம் அபராதம் சேர்த்து விதிக்கப்படும். போதைக்கு அடிமையானவர்கள், முதல் முறை குற்றவாளிகள், வெளிநாட்டு கைதிகள், வயதானவர்கள், பலவீனமானவர்கள் என கைதிகளை தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். மேலும், கைதிக்கு ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் மேற்கொண்டுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.