சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பலர், லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். உயிருக்கு உலை வைக்கும் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
ரத்து செய்த உயர்நீதிமன்றம்: இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்தது.
சந்துரு தலைமையில் குழு: கடந்த 2021ம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வந்தது. அப்போதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்தனர். தமிழ்நாட்டில் இந்த விளையாட்டுக்களை தடை செய்வது குறித்து அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 27-6-2022 அன்று அறிக்கையினை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது.
அதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மேலும் இணையதள விளையாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன.
அவசர சட்டம்: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்த பரிந்துரை, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறுத் தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் 2022 செப்டம்பர் 26ம் தேதி ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் 2022 அக்டோபர் 1ம் தேதி ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டு, அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
மசோதா நிறைவேற்றம்: இதன் தொடர்ச்சியாக 2022 அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக 2022 அக்டோபர் 26ம்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த மசோதாவின் மீது 2022 நவம்பர் 23ம் தேதி, ஆளுநர் சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தயார் செய்து 2022 டிசம்பர் 1ம் தேதி ஆளுநரை நேரில் சென்று சந்தித்து வழங்கினார். மேலும் அவசர சட்டத்தில் கூறப்பட்டதில் இருந்து மசோதாவில் மாற்றம் இல்லை எனவும், ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு ஏற்படுகிறது எனவும் தெளிவுப்படுத்தினர்.
திருப்பி அனுப்பிய ஆளுநர்: இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி , ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது திறன் விளையாட்டுத்தான், மற்ற மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடையில்லை என நிறுவனங்களில் தரப்பில் கூறப்பட்டது. எனினும் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்டது. எனினும், மசோதாவை 131 நாட்களுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
மத்திய அரசு கூறியது என்ன?: இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ”பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.
மீண்டும் மசோதா நிறைவேற்றம்: இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23ம் தேதி 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களால் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் சர்ச்சை பேச்சு: இதற்கிடையே, யுபிஎஸ்சி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அவர் கூறுகையில், "சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 200-ன் படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்தி வைத்தல் என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.
நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல் நிறுத்தி வைப்பது என்று அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம். ஒரு ஆளுநரால் இரண்டு வித சந்தர்ப்பங்களில் மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று பண மசோதாவை அவரால் நிறுத்தி வைக்க முடியாது. இரண்டாவது ஒரு மசோதாவின் மீது ஆளுநருக்கு சந்தேகம் வந்து அதன் மீது விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினால், அதை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநரால் மறுக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் காட்டம்: மசோதாவை நிறுத்தி வைத்தால் அதை நிராகரிப்பதாகவே அர்த்தம் என்ற ஆளுநரின் கருத்துக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநர் அவர்கள் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிர்வாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், விதிகளின்படி அதற்கு இன்று (ஏப்ரல் 10) அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் தடைச் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளாடும் நபருக்கு 3 மாதம் சிறை அல்லது ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும்.