வயது மூப்படைந்து உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று (7.3.2020) அதிகாலை காலமானார். அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகனின் வைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் அவர், "எழுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பேராசிரியர் க.அன்பழகன். அவர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மிக மூத்தத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் மொழிக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றினார்.
தன்னுடைய ஒப்பற்ற எழுத்தாற்றல், பேச்சாற்றலால் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு அரசியல் உலகிற்கும், தமிழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கருணாநிதியின் மூத்த சகோதரனாக, தோழராக துணைநின்று திராவிட கழகத்தை வளர்த்த மாபெரும் தலைவராவார். அவரின் அரசியல் சாதனைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடனுக்குடன்: பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி