சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளன்று இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கரின் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணை செயலாளரான செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (டிச.7) இதுகுறித்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம்,”டிச.6 நாடு முழுவதும் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கரை அவமானப்படுத்தும் நோக்கில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
குறிப்பாக அம்பேத்கர் காவி உடை அணிந்து பட்டையிட்டு, காவிய தலைவனின் புகழைப் போற்றுவோம் எனவும், இவன் இந்து மக்கள் கட்சி தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறியவர் எனவும், அம்பேத்கருக்கு இந்து மதசாயம் பூசி பட்டியலின மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதனால் இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை!