சென்னை: தமிழ்நாடு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
இதில் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் கோயில்களின் திருப்பணிகள் உள்ளிட்ட இதர திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
மேலும் பல்வேறு தனிநபர்களும் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
பின்னர் அக்டோபர் 13ஆம் தேதி, முதற்கட்டமாக சமயபுரம், இருக்கன்குடி, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கோயில் நகைகளை உருக்குவதில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பான சுற்றறிக்கை ஒன்றினை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.
அதில், 'ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முன்னிலையிலேயே பொன் இனங்களை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்ற வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரை எளிய மக்கள் முதல் அலுவலர்கள் வரை எளிதில் சந்திக்கலாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்