திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். அதில்,திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும், ஈழத் தமிழர் படுகொலையை சர்வதேச விசாரணைக்கு எடுத்துச் செல்லவும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோயில் பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் உயர்த்தி வழங்குவது, பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முக்கிய கோயில்களில் கேபிள் கார் வசதி, கிராமக் கோயில்களில் பூசாரிகளுக்கு நிதி உதவி, ஆலயங்களில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ. 1,000 கோடி நிதி உதவி, ஆன்மிக சுற்றுலா செல்லும் 1 லட்சம் நபர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதுமட்டுமில்லாமல் திமுகவின் கொள்கை சார்ந்த அறிவிப்புகள், வளர்ச்சி திட்டங்கள், இலவச அறிவிப்புகள் உள்ளிட்டவற்றையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர் பண்பாடு, தமிழ்மொழி, இந்து மதம் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
இது குறித்து அரசியல் நோக்கர் இளங்கோவன் கூறியதாவது, "தேர்தல் அறிக்கையில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் இடம்பெறும். 1970 - 1980 ஆம் ஆண்டு காலங்களில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் தேவைப்பட்டன. 1990ஆம் ஆண்டிற்கு பிறகு அடையாளம் சார்ந்த பிரச்னைகள் அரசியலில் பெரிதும் பேசப்பட்டது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறலாம். திமுகவுக்கு, அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் திமுக தனது கொள்கையையும் எடுத்து செல்லும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை 2021 “இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு”