சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (60). இவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு இவருடன் தெற்கு ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக பணியாற்றிய கமலநாதன் (56) என்பவரிடம் குடும்ப செலவுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கமலநாதன் அவரது மனைவி அமுல் இருவரும் கிருபாகரனின் வீட்டிற்கு வந்து, 30 ஆயிரம் வட்டியை எடுத்துக்கொண்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளனர். கிருபாகரனிடம் இருந்து கையொப்பமிட்ட 15 காசோலைகள், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மாதந்தோறும் வட்டித் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்துக்கொள்வதாக கமலநாதன் கூறியுள்ளார்.
பின்னர் மாதந்தோறும் 8 வருடமாக வட்டித் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் கமலநாதன் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் கிருபாகரன் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றதால் ஓய்வூதிய தொகையாக 11 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இதனால் கமலநாதனிடம் இருந்து கடனாக பெற்ற 3 லட்ச ரூபாயை கிருபாகரன் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்துவிட்ட காரணத்தால் தனது ஏடிஎம் கார்டு, காசோலையை திருப்பித் தருமாறு கமலநாதனிடம் கிருபாகரன் கேட்டுள்ளார். ஆனால், கமலநாதன் காசோலையைப் பயன்படுத்தி கிருபாகரன் வங்கிக் கணக்கில் அவருடைய மகளின் திருமண செலவுக்காக வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன் இது தொடர்பாக கமலநாதனிடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கடனுக்கு வட்டி கட்டாத உணவக அதிபர் - ஆட்டோவில் கடத்திச் சென்ற வட்டி பிரபாகர்!