முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஆலையை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இவ்வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், இவ்வழக்கில் ஜெகத்ரட்சகனின் மகன் ஆனந்த் சிபிசிஐடி காவல்துறையினர் முன்னிலையில் நேரில் ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், சிபிசிஐடி முன்னிலையில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரி அவரது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.
இதன்மூலம், அவர்களின் நேர்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்றும், விசாரணையில் கிடைத்துள்ள பல தகவல்கள் மூலம் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும், 240 ஏக்கர் நிலமும் 9,000 ஆவணங்களும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் இது தொடர்பான விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.
இதையடுத்து சிபிசிஐடி சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை- நிலமோசடி புகார்; எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகன் கால அவகாசம் கேட்டு மனு!