பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களும், மேற்குப் பகுதியில் இந்துக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவரும், எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வால் ஜமாத் என்பவரும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து கடந்த 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே.8) விசாரித்த நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கோயில் விழாக்களை ஒட்டி கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும் தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல, மாற்று மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என கூறிய நீதிபதிகள், ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலம் உள்ளதால், அந்த பகுதி வழியாக மற்றொரு பிரிவினர் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கும் இலவச பயணம்...ட்வீட்டுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்