மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிக்க, தமிழ்நாடு அமைச்சரவை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.
தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழ்நாடு உள் துறைச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரியும் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அமைச்சரவை முடிவின் மீது ஆளுநர் முடிவு எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஒரு வாரத்தில் ஆளுநர் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் ஆளுநர் சார்பாக மத்திய அரசு தாக்கல்செய்துள்ள பிரமாணபத்திரத்தில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் இந்திய குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்றும், தனக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்தப் பதில் அரசியல் கட்சியினரிடமும், சட்ட வல்லுநர்களிடமும் பெரும் விவாதமாக மாறிவருகிறது. இது குறித்து பேசிய சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஆளுநர் மத்திய அரசுக்கான அஞ்சல்காரராகத் தமிழ்நாட்டிற்குச் செயல்படுகிறார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம் 161இன்படி ஆளுநரே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பதால் அமைச்சரவை தீர்மானத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்று நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். ஆனால், தற்போதைய ஆளுநர் அரசியல் காரணமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. எழுவர் விடுதலை விவகாரத்தில் இனி உச்ச நீதிமன்றம்தான் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் இளங்கோவன், இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணை மனுக்கள், அவருக்கு கட்டுப்பட்டு பணிபுரியும் ஆளுநரால் நிவாரணம் கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் 1,200 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டதைப்போல எழுவர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசால் ஏன் விடுதலை செய்ய முடியவில்லை?
தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்கை மட்டும் காரணம்காட்டி ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், சட்டம் ஒழுங்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசே எழுவரை உடனே விடுதலை செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக கட்சிக்கு வேறுபாடு இல்லை - திருமாவளவன்