முதலமைச்சர், அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத் துறைச் செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தாக்கல்செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1988ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத் துறைச் செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக தானும், திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்குப் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத் துறைச் செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுத் துறைச் செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டதிருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
மேலும், பொதுத் துறைச் செயலாளர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது எனவும், அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் அவர், முதலமைச்சர், அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் அலுவலராக கருத முடியாது.
தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்துசெய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டுவருகிறீர்கள், அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியதுதானே எனக் கருத்து தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த அப்பாவு தரப்பு வழக்கறிஞர், அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.