சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. இதில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் வழியாக தாம்பரத்தை அடையாமல் பெருங்களத்தூர் வழியாக செல்கின்றன. இதனால் வடபழனி, அசோக் பில்லர், விமான நிலையம் பகுதியில் இருக்கும் பயணிகள் கோயம்பேட்டிலோ அல்லது பெருங்களத்தூரிலோதான் ஏறும் நிலை இருந்தது. இதனால் பெருங்களத்தூரில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே அரசு விரைவுப் பேருந்தை வடபழனி வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அனைத்து போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரையும், இரவு 9:30 மணி முதல் காலை 7 மணி வரையும் கோயம்பேட்டில் இருந்து வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் வழியாகவே இயக்க வேண்டும். ஆனால் பல பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் வழியாகவே இயக்கப்படுகிறது.
எனவே இனி வடபழனி, குரோம்பேட்டை, தாம்பரம் வழியாகவே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும் மேல்மருவத்தூர், பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம், குரோம்பேட்டை, அசோக் பில்லர், வடபழனி வழியாகவே இயக்க வேண்டும். இதனை மீறும் ஓட்டுநர், நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.