நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று நாள்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்கு சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளக்காடாக மாறிவிடும். மேலும் மழை நீர், அடையாறு வெள்ளநீர் ஆகியவை வீடுகளில் புகுந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் சேதப்படுத்திவிடும். அதேபோல் தற்போது பெய்துள்ள கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கி அடுக்குமாடி வீடுகளில் தரை தளம் முழுவதையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மேலும் பாதி பேர் அடுக்குமாடி குடியிருப்புகளின் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போதுவரை மழை நீடித்து வருவதால் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் மேலும் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், “முடிச்சூர், வரதராஜபுரம், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்படும் பகுதிகள். எனவே அந்த பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்து மழையில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்டு வெளியேற்றி வருகிறனர்.
அவர்களை அரசு முகாம்களில் தங்க வைத்து உணவு பொருள்கள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் வீடுகளில் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மழைநீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. மேலும் மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்தவருகிறது” என்றார்.