சென்னை: வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மேலும், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்தை மழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளும், வழியனுப்ப வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும், பலத்த மழை காரணமாக டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம், அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல் சென்னையில் இருந்து டெல்லி, ராஜமுந்திரி, சிலிகுரி, புனே, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.