சென்னை: ஆந்திராவில் விபத்து ஒன்றில் காயம்பட்டவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிக்ச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பெற்றுவரும் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆர்டிபிசிஆர் சோதனைகள் முழு வீச்சில் நடத்துவதாலும் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாலும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையின் தரத்தை அறிந்தே ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைகள், வணிக வளாகங்களில் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். தற்போது, காய்கறி சந்தைகளில், சமூக இடைவெளியின்றி மக்கள் நடமாடுவதை காணமுடிகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதே இறப்பு எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக நேற்றைய (அக்டோபர் 23) தினம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
தொற்று பாதிப்பு 50 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், பொதுமக்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தால் கரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். அடுத்த மூன்று மாதங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமுக்கியம். இது பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள் செய்வதை பொதுமக்கள் தாமதம் செய்யவேண்டாம்.
தனியார் பரிசோதனை மையங்களில் அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகமான தொகை வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுத்த பின்புதான் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு!