சென்னை: பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (டிச.14) ஆய்வு செய்தார். அவருடன் அத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை வரை 41 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் முதற்கட்டமாக இருக்கலாம்
தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு மேலாக அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிக பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிரப் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றால் 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதிகப் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வந்த 11, 480 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வந்த 58,745 பயணிகளில் 1,690 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை செய்ததில் 37 பேருக்கு கரோனா இருந்தது. தற்போது 33 பேர் மருத்துவமனையில் உள்ளனர். கடந்த 3 நாளுக்கு முன் ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத நைஜீரியா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் தொடக்க நிலையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவருடைய குடும்பத்தினர் ஆறு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 7 பேரும் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். முதல் நிலை நோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 7 பேரின் மாதிரிகளுடன் 33 பேரின் மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.
நாளை தெரிய வரும்
ஒமைக்ரான் என சந்தேகமாக இருப்பதால் விரைந்து முடிவு அனுப்ப கோரி உள்ளோம். நாளைக்குள் முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். ஒமைக்ரான் தொற்றின் முதற்கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முடிவு வந்ததும் தெரியவரும்" என்று கூறினார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இதனால் யாரும் பதற்றம் கொள்ளத்தேவையில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். பரிசோதனை செய்து தொற்று இருந்தால் சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 'இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது திமுக தான்' - மு.க.ஸ்டாலின்